வெள்ளி, 6 டிசம்பர், 2013

"நீலம்"

நான் எப்பவுமே அதிகம் எழுத மாட்டேன். சந்தோசமா இருக்கும் போது மட்டும் எழுதுவேன். இப்போ  நான் சந்தோசமா இருக்கேன். அதுக்கு காரணம் நீலம் புயல்.


 

30 -10 -2012 செவ்வாய்க் கிழமை மாலை நான் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தேன். எனக்கு காலை 8 மணிக்கே மார்னிங் கிளாஸ் வெச்சிடுவாங்க . காலைல எப்பவும் சாப்பிடாம தான் ஸ்கூல்க்கு  போவேன். ஆனால் காலை, மதியம் சாப்பிட ரெண்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு எடுத்துட்டு போய்டுவேன். அதே மாதிரி அன்னைக்கு கொண்டு போனேன். இப்போ அது  பிரச்சனை இல்லை.

காலைல சாப்பிட்ட டிபன் பாக்ஸ்ஸ ஸ்கூல்லையே மறந்து  வைச்சிட்டு   வந்துட்டேன். அதனால  ரொம்ப  கவலை i பட்டேன். படிச்சா  கூட  மண்டைல ஒன்னும் ஏறல தெரியுமா. சும்மா ஏதோ புக்க  வெச்சிட்டு தான் இருந்தேன்.  படிக்கல. நான் எத வேணாலும்  மறந்துடுவேன் .  ஆனா, டிபன் பாக்ஸ்ஸ மட்டும் மறக்க மாட்டேன். அத எப்படி மறந்தேன் ன்னு தான் இன்னும் புரியல. எங்களுக்கு 5.30 க்கு தான் ஸ்கூல் விடுவாங்க. நான் 5 மணிக்கே டிபன் பாக்ஸ்ஸ பாக்ல வெச்சிடுவேன். அன்னைக்குன்னு பார்த்து வேற டிபன் பாக்ஸ் கொண்டு போய் இருந்தேன். இன்னொன்னு  எப்பவும் நான் கொண்டு போறது . அதனால்  அத மறக்காம   bag ல போட்டுட்டேன் . இன்னொண்ணுல நான் சாப்பிட்டாத ஞாபகம் இல்ல.

இத்தனைக்கும்  அந்த டிபன் பாக்ஸ் யாருதுன்னு என் பெஞ்ச் ல நானே  கேட்டேன்  . அவங்க  காதுல விழல . சரி யாரோ எடுதுக்குவாங்கன்னு நான் வெச்சிட்டு வந்துட்டேன். வீட்டுல டிபன் பாக்ஸ் கழட்டி வைக்கும் போது தான் ஞாபகமே வந்தது. நாம ரெண்டு டிபன் பாக்ஸ் கொண்டு போனோமே . ஒன்னு   இங்க  இருக்கு, இன்னொன்னு  எங்க ன்னு. bag லையே  இன்னொரு முறை தேடினேன். அப்பத்தான் நினச்சேன். நாம யாருதுன்னு கேட்டது நம்ம டிபன்  பாக்ஸ் ன்னு. அம்மாகிட்ட  சொன்னேன்.சரி விடு நாளைக்கு எடுத்துக்கலாம் ன்னு சொன்னாங்க.

என் மனசு கேக்கவே இல்ல. அத எப்படி மறந்தேன் ன்னு யோசிச்சு யோசிச்சு மணி 8 ஆச்சு . அப்போ நீலம் புய பற்றி பேசிட்டு இருந்தாங்க. நான் சரியா காதுல வாங்கிக்கல. நான் தான் சோகத்துல இருக்கேனே. டிபன் பாக்ஸ் விட்டுட்டு வந்துட்டேன்னு. அப்போ தான் டிவி ல நீலம் புயல் காரணமா சில மாவட்டத்துக்கு லீவ் ன்னு சொன்னாங்க. அத பார்த்ததுமே  நம்ம சேலம் வராதா  ன்னு எவ்வளவு  நேரம்  பார்த்தேன் தெரியுமா ?  கடைசி வரைக்கும் போடல. அத நினச்சி, அந்த நேரத்துல என் டிபன் பாக்ஸ் விசயத்தையே மறந்துட்டனா பார்த்துக்கோங்க . சரி எப்படியும்  போடவே மாட்டாங்க ன்னு தெரிஞ்சிகிட்டு நான் நொந்து போயிட்டேன். ஒன்னும் படிக்கல.

அடுத்த நாள் ஏழு மணிக்கு ஸ்கூல் க்கு கிளம்பிட்டேன். அப்போ பார்த்து செய்தில  சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை   ன்னு போட்டாங்க.  ப்ரெண்ட்ஸ் க்கு எல்லாம் போன் பண்ணி இன்னைக்கு லீவு இன்னைக்கு லீவு ன்னு சொல்லி கிட்டே இருந்தேன். அன்னைக்கு முழுக்க மகிழ்ச்சியா  இருந்தது. ஒண்ணுமே  படிக்காதது மட்டும் தான் கஷ்டமா இருந்தது. புதிய தலைமுறைசேனல்ல மகாலிங்கம் ஒருத்தர் கலங்கரை விளக்கத்துல ஏறி செய்தி சொல்லிகிட்டே இருந்தாரு. நடுல ''புயலை தொடரும் புதிய தலைமுறை'' ன்னு வேற போட்டுகிட்டே  இருந்தாங்க. இது  மட்டும் இல்லாம ,  கீழ   ஓடுற செய்தில . " வானம் மோகமூட்டத்துடன் காணப்படுகிறது " ன்னு போட்டாங்க. ஹலோ ஒரு நிமிஷம் நான் தப்பா எழுதல. செய்திலையே தப்பா தான் போட்டாங்க. அத பார்த்து நானும் அக்காவும் சிரிச்சோம். அந்த சந்தோசம்  அதிக  நேரம்  நீடிக்கல . மாலை ஐந்து  மணி இருக்கும். நாளை வியாழக்கிழமை   சில மாவட்டங்களுக்கு விடுமுறை ன்னு போட  ஆரம்பிச்சிட்டாங்க. இருக்க இருக்க மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகமாச்சு. ஆனால், சேலம் போடவே இல்ல. எனக்கு கோபம் இவ்வளவு தான்னு இல்ல. ஏனா  ஈரோடு, வேலூர், எல்லாம் இருக்கே சேலம் இல்லையே ன்னு தான். திருவண்ணாமலை , கன்னியாகுமரி னு அதிக  எழுத்து இருக்குற  ஊருக்கெல்லாம்  விட்டுட்டாங்க .  நம்ம மூணு  எழுத்து இருக்கிற  சேலத்துக்கு மட்டும் விடலன்னு வருத்தமாச்சு. சரி இருந்தாலும் முயற்சிய கைவிடாம  பத்து  , பதினோரு  மணி வரை   டிவி பார்த்துட்டே  இருந்தேன். அம்மாவேற வா தூங்கலாம். காலைல ஸ்கூல் க்கு போகனும் ன்னு வேற கடுப்பேத்தினாங்க. ஒரு வேளை ஸ்கூல் இருந்தாலும் இருக்கும் னு நினச்சேன். எங்க ஸ்கூல் சுதந்திர  தின  விழா  அன்னைக்கு கூட full day வெச்சாங்க . அப்போ எங்களுக்கு  எப்படி இருக்கும். சரி அதையே  சமாளிச்சிட்டோம் , இதெல்லாம்  என்ன  ன்னு மனச தேத்திகிட்டேன்.

நான் அக்காகிட்ட  நீ லீவ் விடுறாங்களா ன்னு பார்த்துட்டே இருன்னு லீவ் ன்னு போட்டா  என்னை எழுப்பியாவது சொல்லு ன்னு துங்கப்போனேன். சொல்லும் போதே துக்கம் தொண்டைய அடைச்சது.. நான் தூங்குறதுக்கு  முன்னாடி  ஜன்னலருக்கே  நின்னு  பார்த்தேன் காத்து  நல்லா வீசினது, வெளில  கதவ திறந்து  பார்த்தேன் மழை வர அறிகுறியே இல்ல. நான் சோகமா கதவ சாத்திவிட்டுட்டு மீண்டும் ஜன்னல் அருகே போய் நின்னேன். எங்க ஜன்னலுக்கு பக்கத்துல அரசமரம் இருக்கு. அதுல இருந்து காத்து  வீசியது . அப்போ அக்கா சொன்னா  இது  தான் நீலம் புயல் ன்னு. நான்  நீலம் புயல்கிட்ட சோகமா நாலு வார்த்தை பேசிட்டு படுக்க போயிட்டேன். அப்போ எங்கயோ இருந்து''நான் வருவேன்''  ன்னு ரகுமான் பாடிய பாட்டுபாடிகிட்டு  இருந்தது. அது நீலம் புயல் சொல்ற  மாதிரியே  இருந்தது. நல்லா தூங்கிட்டேன்.

அடுத்த நாள் - இன்று காலை ஆறரை மணிக்கு எழுந்தேன். டிவி பார்த்தா சேலத்துக்கு விடுமுறை ன்னு ஓடிகிட்டு   இருந்தது. நான் மனசார எங்க ஊர் மாவட்ட ஆட்சியர் க்கு    நன்றி சொன்னேன். அக்காவ  எழுப்பி   சேலத்துக்கு லீவ் ன்னு சொல்லிட்டு திரும்பவும் படுத்துட்டேன். அக்கா, காலேஜிக்குமா ன்னு கேட்டா, நீயே பார்த்துக்கோ ன்னு சொல்லிட்டு படுத்துட்டேன். அப்புறம் ஒன்பது மணிக்கு தான் எழுந்தேன். இன்னைக்கு உருப்படியா  ஒன்னும் செய்யல . இத  எழுதியதை  தவிர.  வீட்டுல புயல பற்றி பேசிட்டு இருந்தாங்க. வாரம் வாரம் நீலம் வந்தா நல்லா இருக்கும் ன்னு சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க.

என் டிபன் பாக்ஸ் மறந்து வெச்சிட்டு வந்த சோகத்துல நான் இருந்த போது நீலம் புயல் தான் அந்த சோகத்தை   மறக்க வைக்க  லீவ் விட்டது . இப்போ என் டிபன் பாக்ஸ் விட்டுட்டு வந்த சோகத்தை   விட  நீலம்புயல்  போய்டுச்சே ன்னு சோகம் தான் இப்போ அதிகமா இருக்கு .

டிபன் பாக்ஸ் கூட நாளைக்கு போய் கிளாஸ்ல எடுத்துக்கலாம். ஆனால் நீலம் புயல...... :( :( :(

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

"மூன்று பாரதியார்கள்

எங்களுக்கு நேற்று காலாண்டு தேர்வு முடிந்தது. எங்கள் தமிழ் தேர்வு அன்று நடந்த ஒரு நிகழ்வை பதிவு செய்கிறேன். தமிழ் தேர்வு அன்று தேர்வு எழுதிவிட்டு வந்தோம். பின்னர் நானும் எனது தோழிகளும் வகுப்பறைக்கு வந்து நாம எழுதியது சரியா தவறா என்று நோட்ஸ் எடுத்து திருப்பி திருப்பி பார்த்துகிட்டு இருந்தோம். அப்போ சில பேர் ஹைய்யா நான் எழுதியது சரி என்றும் மற்றும் சில பேர் ஐயோ நான் இது தப்பு பண்ணிட்டேன்டி அப்படினும் பீல் பண்ணி சொல்லிட்டு இருந்தாங்க.

இந்து ப்ரியா ன்னு ஒரு பொண்ணும், கோகிலான்னு ஒரு பொண்ணும் எத்தனை ரைட் எத்தன தப்புன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்போ கோகிலான்னு சொன்னேனே அந்த பொண்ணு என்கிட்ட பாரதியார் குறிப்பு வரைக என்று கேள்வி தாளில் வந்து இருந்ததே அதுக்கு நோட்ஸ்ல இருந்த சுப்பிரமணிய பாரதியார் குறிப்பு வரைக அதுதானே எழுதணும் ன்னு கேட்டா... ஆமாம்டி அது தான் எழுதணும் ன்னு நானும் சொன்னேன்.

அப்போ இந்து ப்ரியாக்கு தோணுச்சு பாருங்க ஒரு சந்தேகம் என்கிட்ட ஏண்டி சுப்பிரமணிய பாரதியாரும், வெறும் பாரதியாரும் ஒண்ணானு கேட்டா....?? எனக்கு இந்த கேள்வியை கேட்டு அவ நிலைய நினச்சி மனசுக்குள்ள சிரிச்சேன்.. அப்புறம் நான் வேணுன்னே சொன்னேன், இல்லடி பாரதியாரும், சுப்பிரமணிய பாரதியாரும் பக்கத்து பக்கத்து வீட்டுல இருந்தவங்கன்னு சொன்னேன். அதுக்கு அவள், அதானே பார்த்தேன் எப்படியோடி நல்லவேள நான் அந்த கேள்வியை எழுதல கோகிலாக்கு ஐந்து மார்க்கு போச்சுப்போ ன்னு சொன்னாள். நீயும் அந்த பாரதியார் கேள்விக்கு நோட்ஸ்ல இருந்த சுப்பிரமணிய பாரதியார் பதிலையா எழுதிவெச்ச ன்னு கேட்டா. நானும் சோகமா முகத்தை வெச்சிகிட்டு ஆமாம்டி நானும் தெரியாம அத தான் எழுதிவெச்சிட்டேன் ன்னு சொன்னேன்.

அதுக்கு அவள், ஏண்டி question ன ரெண்டு மூணு தடவ திருப்பி படிக்கமாட்டீங்களா ன்னு எங்கள திட்டினா. அப்புற அவ கேட்டா எக்ஸாம் ஹால் க்கு நாம போகும் போது +2 அக்காங்க மகாக்கவி சுப்பிரமணிய பாரதியார் எட்டயபுரத்துல பிறந்தாங்கன்னு படிச்சிட்டு இருந்தாங்களே அவர் யாருடி ன்னு என்கிட்ட கேட்டா... நான் சொன்னேன் அய்யய்யோ இவர பத்தி சொல்றதுக்கு மறந்துட்டேண்டி.. சீக்கிரம் சொல்லுடி சாப்பிட போகணும் ன்னு அவசரபட்டாள் இந்து ப்ரியா. இம் சரி அப்படின்னு நான் கதை உட ஆரம்பிச்சேன்.....

பாரதியார், சுப்பிரமணிய பாரதியார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எல்லோருமே சின்ன வயசுல இருந்து பக்கத்துக்கு பக்கத்து வீட்டுல இருந்தவங்க.. ஒண்ணா விளையாடுவாங்க ன்னு சொன்னேன். அப்படியாடி ன்னு ஆச்சரியமா கேட்டா. ஆமாம்டி ன்னு சொன்னேன்.

அப்புறம் ஏன் பாரதியார் பற்றி மட்டும் குறிப்பு வரைக ன்னு கேட்குறாங்க... சுப்பிரமணிய பாரதியும், மகாகவி சுப்பிரமணிய பாரதியும் பாவம் தானே.... அவங்க குறிப்பு ஏன் தரவே மாட்டிக்குறாங்க ன்னு கேட்டா.... அதுக்கு நான் சொன்னேன், இல்லடி பாரதியாருக்கு மட்டும் தான் நல்லா கவிதை எழுத தெரியும். மீதி ரெண்டு பேரும் சுமாராதான் எழுதுவாங்க ன்னு சொன்னேன். அப்போ மத்த ரெண்டு பேரோட கவிதைகள் இருக்கா.... ?/ ன்னு கேட்டா... இருக்குடி ன்னு சொன்னேன். உங்க வீட்டுல இருக்கா ன்னு கேட்டா, இருக்கே ன்னு சொன்னேன்.

மூணு பேரோடு கவிதைகளுமே உங்க வீட்டுல இருக்கான்னு ஆச்சரியத்தோடு கேட்டா.. ஆமாம்டி ன்னு சொன்னேன். அவங்க ரெண்டு போரோட கவிதை புத்தகத்தையும் எடுத்துட்டு வாடி ன்னு சொன்னா. கொடுத்தா நீ படிப்பியான்னு கேட்டேன். இம் அவங்க குறிப்பையும், கவிதையையும் பார்க்கலாமே ன்னு தான் கேட்டேன். ன்னு சொன்னா. சரி நான் நாளைக்கு கொண்டுட்டு வரேன் சாயங்காலம் ஞாபகபடுதுன்னு சொன்னேன்...

அப்புறம் சாப்பிட உட்கார்ந்தோம். தமிழ் செகண்ட் பேப்பர்க்கு படிச்சிட்டு இருந்தோம். சாயங்காலம் வீட்டு பெல் அடிச்சாங்க. அப்போ ப்ரியா மறந்துடாதடி மூணு பாரதியார் புத்தகத்தையும் எடுத்துட்டு வான்னு சொன்னா.. அப்போ நான் அவகிட்ட மூன்று பாரதியாரெல்லாம் இல்லடி .. பாரதியார், சுப்பிரமணிய பாரதியார், மாககவி சுப்பிரமணிய பாரதியார் எல்லோரும் ஒருதங்கதான் ன்னு சொன்னேன்.

அதுக்கு அவள், ஏய்...... போய் சொல்லாதடி நாளைக்கு உன்னால அவங்க மூணு பேரோட புத்தகத்தை எடுத்துட்டு வர முடியாதுன்னா முடியாதுன்னு சொளிடி, அதுக்காக இப்படி அவங்க மூணு பேரும் ஒருத்தங்கதான் ன்னு சொல்லாத எனக்கு கெட்ட கோவம் வந்துடும் ன்னு மிரட்டினா......

நான் அவளிடம் உண்மையாக ஒருத்தர் தான். அவர் இயற்பெயர் சுப்பிரமணியம். அவர் சின்ன வயசுலேயே கவிதை எழுதினதால பாரதின்னு பட்டம் கொடுத்தாங்க. அவர் சூப்பரா எழுதியதால மகாகவி ன்னு பட்டம் கொடுத்தாங்க என்று சொன்னேன்.

"கற்றது தமிழ்" அஞ்சலி மாதிரி ... " நிஜமாதான் சொல்றியா.." ன்னு கேட்டா.. நானும் ஜீவா மாதிரி இம்ம்ம்ம்ம்ம்ம்ம் ... ன்னு தலை ஆட்டினேன். உடனேஅவ நான் எதுக்கு கேக்குறேனா , மதியம் சொன்னத இப்போ பொய் ன்னு சொன்ன மாதிரி, இப்போ சொன்னத நாளைக்கு பொய்ன்னு சொல்லகூடாதுபாரு அதுக்கு தான்... இதுல என்ன பொய் சொல்றதுக்கு இருக்கு. காலைல நான் சொன்னது தான் பொய் இப்போ சொன்னது தான் நிஜம் னு சொன்னேன்.

சரி, இனி எந்த பாரதியார் குறிப்பு குறிப்பு வரைக ன்னு கேட்டாலும் இவரையே தான் எழுதணுமா ன்னு கேட்டா. ஆமாம் டி ன்னு சொல்லிட்டு நகர்ந்தேன்.

உடனே.... அப்போ பாரதியாரும், பாரதிராஜாவும் ..............ன்னு இழுத்தா.. உடனே நான் சிரிச்சிக்கிட்ட நாளைக்கு சொல்றேண்டின்னு ஓடி வந்துட்டேன்....

""" PRAISE THE LORD """

நான் பதினொன்றாம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்த முதல் நாள் எனது வகுப்புக்குள் நுழைந்தேன். பெல் அடித்தது. prayer க்கு போனோம். எனக்கு அது புதியது அப்பள்ளியில். தமிழ் தாய் வாழ்த்து, உறுதி மொழி, செய்திகள் சொல்லி முடித்தாங்க... எங்க HM மைக்க பிடிச்சாங்க பாரு... சும்மா பத்து நிமிஷமா பேசினாங்க. பேசுறதுக்கு முன்னாடி, PRAISE THE LORD GUD MORNING CHILDREN ன்னு சொன்னாங்க.உடனே அணைத்து மாணவிகளும் GUD MORNING SISTER PRAISE THE LORD ன்னு சொன்னாங்க. அப்புறம் சிஸ்டர் பேச ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவிகளின் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சொல்லி (முன் கூட்டியே சிஸ்டர் கிட்ட மாணவிகள் கடிதம் மூலம் சொல்லிடுவாங்க) குழந்தைகள் வேண்டினா இயேசு அப்பா மறுக்காம தருவாரு. இயேசு அப்பா இருப்பதே உங்களுக்காக தான். இயேசு அப்பா உங்க எல்லோரையும் கவனிச்சிகிட்டே தான் இருக்காரு. அதனால, நீங்க நல்லள பிள்ளைகளா இருக்கணும்ன்னு சொன்னாங்க. திரும்பவும் சிஸ்டர் PRAISE THE LORD CHILDREN நு சொல்வாங்க. உடனே மாணவிகளும் THANK U SISTER PRAISE THE LORD ன்னு சொன்னாங்க.

PRAYER முடிஞ்சி கிளாஸ் க்கு போனோம். PRAYER சொல்லிட்டு மீண்டும் PRAISE THE LORD மூன்று முறை சொல்லிட்டு அமர்ந்தோம். ஆசிரியை வந்தவுடன் மீண்டும் GUD MORNING MISS PRAISE THE LORD ன்னு சொன்னோம். உடனே மிஸ் GUD MORNING PRAISE THE LORD ன்னு சொன்னாங்க. மற்ற வகுப்பில் இருந்து எதாவது கேட்பதற்காக மாணவி யாரேனும் வந்தால் வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியையை பார்த்து GUD MORNING MISS PRAISE THE LORD ன்னு சொல்லி தனது தேவையை கேட்பாங்க. இப்படி ஒவ்வொரு மிஸஸ் வரும் போதும் இதே PRAISE THE LORD கூத்து தான் நடக்கும். படிக்கலனா கூட திட்டமாட்டாங்க போல இருக்கு, ஆனால், இந்த PRAISE THE LORD சொல்லலைனா திட்டுவாங்க போல் இருக்கு.

மதியம் சாப்பாட்டு மணி அடித்தவுடன் பைபிள் ல இருந்து வசனங்கள் சொல்லி மீண்டும் PRAISE THE LORD ன்னு சொல்லிட்டு சாப்பிடனும். சாப்பாடு பெல் முடிந்ததும் திரும்பவும் வகுப்புக்குள் வந்ததும் PRAYER சொல்லிட்டு PRAISE THE LORD சொல்லிட்டு உட்காரனும். சாயங்காலம் கிளம்பும் போதும் இதே PRAYER , PRAISE THE LORD சொல்லிட்டு தான் வீட்டுக்கு வரணும்......... இத்தனையும் ஒரு நாளில் நடந்தது. இது முதல் நாளில் மட்டும் அல்ல, நாள் தோறும் இதே கதை தான் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது..........


புதன், 8 ஆகஸ்ட், 2012

எமது வித்தியாசமான ஆசிரியர்கள்...

எங்க கிளாஸ் மிஸ் ரொம்ப நல்லவங்க. படின்னு சொன்னதே இல்ல. நடத்தினால் தானே படிக்க சொல்லுவாங்க. மிஸ் வகுப்புக்கு வருவாங்க நாலஞ்சி பேஜ் திருப்புவாங்க. சும்மா நாலு லைன் நடத்துவாங்க பாடம் ஓவர் ன்னு சொல்லுவாங்க. இத்தனை நாளும் இதே தான் நடந்துட்டு இருக்கு. இதுல வேறு இந்த மிஸ் ரெண்டு சப்ஜெட் க்கு வராங்க (வணிகவியல், கணக்கு பதிவியல்)

அப்பிரம் எங்க தமிழ் மிஸ் பற்றி சொல்லியே ஆகணும். கோபபடுவது எப்படின்னு யாராவது தெரிஞ்சிக்கணும் ன்னு ஆசைபட்டா அவங்கள பார்த்து கத்துகலாம். கோபத்துல P .HD பண்ணவங்க பாடத்துக்கு நடுவுல நடுவுல வாங்க வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை INTREST டா சொல்லிட்டே போவாங்க.

அப்புறம் எங்க ENGLISH MAM எதாவது டெஸ்ட் ன்னு சொன்னாங்கன்னா MAM SORRY MAM படிக்கல MAM நாளைக்கு டெஸ்ட் வெச்சிக்கலாம் MAM இப்படி வார்த்தைக்கு வார்த்தை MAM MAM MAM ன்னு சொன்னா சரி நாளைக்கு டெஸ்ட் வெச்சிக்கலாம் ன்னு சொல்வாங்க. ஆனால், சில சமயம் இந்த MAM என்னும் மந்திரகோல் பலிக்காது. உசுர பணைய வெச்சி எத்தன முறை MAM MAM MAM ன்னு சொன்னாலும் டெஸ்ட் வெச்சிடுவாங்க. ஏன்னா...... யாரவது ஒரு மாணவி தெரியாம MISS ன்னு கூப்பிட்டு இருப்பா..... அது காரணமா கூட இருக்கலாம். இந்த கொடுமை எல்லாம் நடக்க கூடாதுன்னு தான் இங்கிலீஷ் PERIOD க்கு முந்தைய PERIODலையே MAM MAM MAM ன்னு சொல்லி PRACTISE பண்ணிக்குவோம். LEADER மாணவிகளுக்கு முன்னாடி நின்னு MAM வந்தாங்கன்னா GUD MORNING MAM ன்னு சத்தமா சொல்லுங்க. MAM MAM MAM ன்னு சொல்லுங்க.. அப்படி சொல்ல வராதவங்க சொல்லலைனாலும் பரவாயில்லை விட்டுடுங்க. அதுக்காக MISS ன்னு சொல்லிடாதிங்கன்னு மாணவிகளின் காலில் விழாத குறையாக பரிதாபமாக கெஞ்சுவாள்.

இந்த MAM என்ற வார்த்தைக்கே இங்கிலீஸ் MISS மயங்குவாங்கன்னு எங்களுக்கு கற்று கொடுத்ததே +2 அக்காங்க தான். நீங்க MISS ன்னு சொன்னா டெஸ்ட் கன்பார்ம் அதனால MAM ன்னு சொல்ல கத்துக்கோங்க ன்னு PRATISE தந்து வழிகாட்டினாங்க. ஆனால், B2 SECTION மாணவிகளுக்கு இந்த விவரம் தெரியாம MISS ன்னு சொல்லி சொல்லி தினமும் டெஸ்ட் எழுதுவாங்க பாவம்.........இன்டர்வெல் டைம்ல கூட டெஸ்ட் எழுதுவாங்க. அவங்க எழுதின டெஸ்ட் க்கு அளவே இல்லை. ஆனால், நாங்க எழுதிய டெஸ்ட்டை விரல் விட்டு எண்ணிடலாம். எங்களுக்கு தான் MAM தெரியுமே.......

அப்புறம் பொருளாதாரம் MISS அவங்க வாயில போடி, வாடி தான் வரும் ஆனால், இந்த பொருளாதார மிஸ்சை மடக்குவதற்கு MAAM ன்னு எதாவது வழி இருக்கான்னு நாங்க ஆராய்ச்சி எல்லாம் மேற்கொண்டோம்...... ஆனால், ஒரு வழியும் கிடைக்கல. டெஸ்ட் எழுதி தான் தொலையனும். MISS நல்லாத்தான் பாடம் நடத்துவாங்க. இப்படி பட மிஸ்க்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாம போச்சு.. அதனால அவங்களுக்கு பதிலா வேற ஒரு மிஸ் பொருளாதாரம் பாடம் எடுத்தாங்க. (பழைய பொருளாதார மிஸ்சோடா மாணவி தான் புதிய பொருளாதார மிஸ் ) பழைய மிஸ் பாடம் நடத்தினா பாடத்தினை மட்டும் தான் நடத்துவாங்க. அனால், புதிய மிஸ் பாடத்தினை தவிர மற்றதை எல்லாம் சொல்லுவாங்க. அவங்க சொந்த கதை, சோககதை, அவங்க அம்மா அப்பா புருஷன் மாமனார் குழந்தை..... இப்படி இவங்கள பற்றியே தான் சொல்லிட்டே இருப்பாங்க.

இப்போ நினச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது. அவ்வளவு நல்லா நடத்துவாங்க. பாடத்தினை அல்ல........ மிஸ் வகுப்புக்குள்ள ENTER ஆகும் போதும் நாங்க எல்லோரும் புத்தகத்தினை பையில் போட்டுவிடுவோம். முகத்தை கழுவிட்டு எல்லோரும் ஆர்வமா உட்கார்ந்துவிடுவோம். பாடத்தினை கவனிக்க அல்ல...... கதையினை கேட்க....

சில சமயம் நிஜமா பாடம் நடத்தும் பொது நான் சொல்றத மட்டும் கவனிச்சா போதும் புத்தகத்தினை பார்ககாதிங்க ன்னு சொல்வாங்க. மிஸ் அந்த அளவுக்கு டாப்பா நடதுவாங்கன்னு பார்த்தா புத்தகத்தை வரி விடாம படித்து முடித்து விடுவாங்க. அந்த விஷயம் எங்களுக்கு தெரிய கூடாதுன்னு தான் புத்தகத்தை மூட சொல்றாங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சி போச்சு. நடுவுல நடுவுல குடும்ப விவகாரம் வேற... நல்ல வேலை அப்புறம் எங்களுக்கு பழைய மிஸ் மீண்டும் வந்துட்டாங்க. அப்பாடா..... ன்னு பெருமூச்சு விட்டோம்.

அப்புறம் HISTORY MISS இவங்கள பற்றி சொல்ல ஒண்ணுமே இல்ல. எல்லாத்துலயும் BEST அவங்களுக்கு உடம்பு சரி இல்லாம போச்சு. புதிய பொருளாதாரத்துக்கு வந்த மிஸ் வரலாற்றுக்கும் வந்தாங்க..... என்ன நடந்து இருக்கும் ன்னு சொல்லவா வேணும்... அதே சொந்த கதைகள்...........அந்த மிஸ்க்கு எந்த பாடத்தினை கொடுத்தாலும் சொந்த கதையினை வெச்சே ஒட்டிடுவாங்க. எந்த பாடத்தினை கொடுத்தாலும் அவங்க எடுப்பது சொந்த பாடத்தினை தானே..... பாவம்.. இப்போ காலாண்டு விடுமுறை.... அந்த மிஸ் சொந்த கதையினை சொல்வதற்கு யாருமே இல்லாம தவிப்பாங்க.......அதை நினச்சா தான் வருத்தமா இருக்கு........


இதுவும் கடந்து போகும்

நாளைக்கு ஜூன் 1

தூக்கமே வர மாட்டிக்குது.... இதயம் படபடக்குது

பள்ளிக்கூடம் கண்ணுக்குள்ள வந்து வந்து போகுது....

ஸ்கூல யாராவது இடிக்க மாட்டாங்களான்னு தோணுது....

விடியவே கூடாதுன்னு தோணுது

பூமி சுத்துறது அப்படியே நின்னுடகூடாதா ன்னு தோணுது....

சின்ன புள்ளதனமா யோசிக்க தோணுது....

உங்களுக்கு எங்க தெரியும் ஸ்கூல் படிக்க போற கஷ்டம்லாம்..... நீங்க எல்லாத்தையும் கடந்து வந்துட்டீங்க....

கத்தி அழனும் போல இருக்கு யாராவது காப்பாத்துங்கன்னு.. ஆனால்... என்ன சொல்லி என்ன.... ஒண்ணுமே நடக்காதுன்னு நல்லாவே தெரியும்.. ஹும்ம்ம்ம் நான் மட்டுமா புலம்புறேன்,,,,, நாளைக்கு ஸ்கூல்க்கு போறத நினச்சி எல்லா பிள்ளைகளும் தான் புலம்புவாங்க....

எனக்கு ஸ்கூல் பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்லல.. பிடிக்கும்.... ஆனால் பிடிக்காது...

ஒன்னு லீவ் விடனும்... அப்படியே விட்டாலும் வீட்டுபாடம் தரக்கூடாது. அதுக்கு பேசாம ஸ்கூலே வெச்சிடலாம் .... சரி படிச்சிட்டு வர சொன்னதை நாளைக்கு படிக்கலாம் , நாளைக்கு படிக்கலாம் ன்னு தள்ளி போட்டு தள்ளி போட்டு கடைசி நாளும் வந்துடுச்சி...எல்லா பாடத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் தொட்டு வெச்சி இருக்கேன். ஸ்கூல் க்கு போனா அங்கேயே இருக்கணும் ன்னு தோணும்....ஆனால் லீவ் விட்டா மட்டும் வீட்டுலயே இருக்கணும் ன்னு தோணுது....

படிக்குறதெல்லாம் படிச்சிடுவேன்.. ஆனால் வீட்டுபாடம் எழுதுறது தான் கஷ்டமா இருக்கு. எதுமே பண்ணாம போனா மிஸ் ஒரு மாசம் என்ன பண்ணி கிழிச்சீங்க ன்னு கேப்பாங்க.. ஆனால் அதே மிஸ் தான் லீவ்வ நல்ல என்ஜாய் பண்ணிக்கோங்க ன்னும் சொன்னாங்க.... இப்படி மிஸ் அந்நியன் மாதிரி பேசினா எப்படி....??!! துங்கினாவே மிஸ் உம், ஸ்கூல் உம் தான் கனவுல வருது. இப்ப நான் என்ன செய்ய.... இப்ப நான் என்ன செய்ய ..... (தம்பி படத்துல வர மாதவனை போல் படிக்கவும் )

அப்புறம் ஒரு மிக்கியமான விஷயம் இனி மேல் என்னை இந்த முக நூலில் அடிக்கடி பார்க்க முடியாது...... +2 முடிச்சிட்டு தான் மீண்டும் வருவேன்.... டாடா.......

இதுவும் கடந்து போகும் ன்னு ஒரு ஆசைல தான் நாளைக்கு பள்ளிக்கு போறேன்....

ஞாயிறு, 28 நவம்பர், 2010

வெட்டியாக கழித்த நாட்கள்


3.11.2010 அன்று காலையில் இருந்து மிகவும் சந்தோஷம். ஏனென்றால், அன்று மாலை வீட்டிற்கு அனுப்புகிறார்கள் . தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை. அன்னைக்கு காலையிலேயே எல்லாம் எடுத்து வைக்கலாம்ன்னு நினச்சேன். சரி நாம ஆறு மணிக்கு தான போவோம் என்று விட்டுவிட்டேன். அப்புறம் காலைல சாப்பிட்டு விட்டு கிளாஸ் க்கு சென்றால் முதல் பாட வேளை அறிவியல். டெஸ்ட் வேற சொல்லி இருந்தாங்க. என்ன பண்றதுன்னு தெரியல. 2.4.2010 அன்னைக்கு சாயங்காலம் படிக்கல. வீட்டுக்கு போற குஷி தான். அப்புறம் முதல் period மிஸ் வந்தாங்க. நாம செத்துட்டோம் ன்னு நினச்சேன். இத்தனைக்கும் 1 பாடம் தான் டெஸ்ட். திடீர்ன்னு மிஸ் இப்போ படிங்க. last period டெஸ்ட் எழுதுங்கன்னு சொன்னாங்க. அந்த பாடம் படிச்சதுதான் ஆனாலும் test ன்னு சொன்னதால பயம் வந்துடுச்சு. எப்படியோ அந்த 1st period படிச்சிக்கிட்டே ஓடிடுச்சி. எப்படியோ அடுத்த period ல கணக்கு சார் sum தான் நடத்துவார் என்ற தைரியத்துல ஜாலியா இருந்தேன். நினச்ச மாதிரியே சார் sum தான் நடத்தினாரு. அந்த period எப்படியோ போச்சு.

அப்புறம் break எல்லார்க்கிட்டையும் சிரிச்சி பேசி அதுவும் முடிந்துவிட்டது. மூன்றாவது period ஆரம்பித்தது. test எழுதணும் ஏற்கனவே படித்தது தான் அதனால எப்படியோ எழுதிட்டேன். நாலாவது period english படிக்க சொன்னாங்க. அப்பாடான்னு பெருமூச்சு விட்டேன்.

அப்புறம் அதான் நம்ம period வந்தது. அதான் சாப்பாடு period. சாப்பாடு உள்ள இறங்கவே இல்ல. இருந்தாலும் சாப்பாட்டுக்கு நாம தானே காசு கட்டுறோம் ன்னு நினச்சி கொஞ்சம் சாப்பிட்டேன்.

அப்புறம் தமிழ் பாடவேளை வந்தது. தமிழ் தானே எல்லாம் படிச்சாச்சு. எது கொடுத்தாலும் எழுதலாம் ன்னு விட்டுட்டேன். test எழுதியும் விட்டுட்டேன். ஆறாவது period english படிச்சோம். அப்புறம் ஒரு பாடம் full test சொன்ன science period வந்தது. முகத்துல இருந்த சந்தோஷம் எல்லாமே போச்சு. ஒரு periodனாலே மயக்கம் வரும் ஏழு, எட்டு தொடர்ந்து 2 period தாங்கமுடியுமா ன்னு நினச்சேன். மிஸ் வந்தாங்க. கிளாஸ் அமைதியா இருந்தது. வந்த உடனே நோட் எடுங்க question சொல்றேன் எல்லோரும் புக்க பைல போடுங்க ன்னு சொன்னாங்க. அப்புறம் நோட் எடுத்தோம். மிஸ் question சொன்னாங்க. நான் எல்லாமே படிச்சிட்டு தான் போனேன். ஆனா எல்லாமே மறந்து போன மாதிரி இருந்தது. சரி நாம பார்க்காத testடான்னு நான் பாட்டுக்கு எல்லாமே தெரிஞ்சவ மாதிரி எழுதிட்டு இருந்தேன். மிஸ் வேற என்னையே பார்த்துட்டு இருந்தாங்க. சரி ன்னு விட்டுட்டேன். அப்புறம் நாலு மணி ஆச்சு விடுதி மாணவர்கள் கிளம்பலாம் ன்னு சொன்னாங்க. எங்க மிஸ் தான் ரொம்ப நல்லவங்களாச்சே நீங்க மட்டும் ஒரு கேள்வி எழுதி காட்டிட்டு போலாம் ன்னு சொன்னாங்க.

மொத்தமா ஐந்து மதிப்பெண் வினாக்கள் நான்கு கொடுத்து இருந்தாங்க. அந்த நாலுமே எனக்கு தெரியும். எல்லாத்துலயும் பாதி பாதி எழுதி வெச்சிட்டு இருந்தேன். மிஸ், கொண்டு வாங்க ரெண்டு period டா ஒண்ணுமே எழுதலையான்னு கேட்டாங்க எங்க கிளாஸ் ல மூன்று பேர் ஹாஸ்டல். மூன்று பேருமே கொண்டு போனோம். அதுல ரெண்டு பேர் நோட்டும் திருத்திட்டாங்க. லாஸ்ட் நோட் என்னுடையது. எனக்கு இந்த ஒரு நாள் வராதா வராதா ன்னு நினைச்சது ரொம்ப தப்பா போச்சே இப்படி வந்து மாட்டிக்கிட்டமே ன்னு நினச்சேன். மிஸ் திருத்திட்டாங்க. நாலு கேள்வியும் மூன்று பெரும் home test எழுதிட்டு வாங்கன்னு சொன்னாங்க. அப்பாடா ன்னு சந்தோசப்பட்டேன்.
அப்புறம் பிரண்ட்ஸ் கூட வீட்டுக்கு வந்தேன். வந்த உடனே பை ஒரு பக்கம், செருப்பு ஒரு பக்கம் போட்டுட்டு உள்ள வந்தேன். வீட்டுக்கு வந்துட்டோம் ன்னு சந்தோசமா இருந்தது. அம்மா எப்படி இருக்க? ஏன் இளச்சிட்ட ன்னு கேட்டாங்க. அப்புறம் சிக்கன் எடுத்துட்டு வந்தாங்க. அக்கா எனக்கு சமைத்துக் கொடுத்தா.அன்னைக்கு இரவு வீட்டு சாப்பாடு சாப்பிட்டேன். அப்புறம் என்ன டிவி தான், சிஸ்டம் தான். ஸ்கூலா இருந்தா ஒவ்வொரு period ம் ஒரு வருஷம் மாதிரி போகும். ஆனா வீட்டுக்கு வந்துட்டா இப்ப தான் வந்த மாதிரி இருக்கும் அதுக்குள்ளே விடிஞ்சிடும். அம்மா ஏதாவது கட்டுரை எழுது எழுது ன்னு சொல்வாங்க. நிறைய புத்தகங்கள் எனக்காக வாங்க வெச்சி இருந்தாங்க நான் படிப்பேன் ன்னு. ஆனா நான் படிக்கல டிவி தான் கதி ன்னு இருந்துட்டேன்.

4.11.2010 காலை எட்டு மன்னிக்கு எழுந்தேன். எழுந்ததும் டிவி போட்டேன். பட்டு மணி இருக்கும் என் firend கவிதா போன் பண்ணி பேசினா. அவ கிட்ட பேசிட்டு கம்ப்யூட்டர்ல கேம் விளையாடினேன். அன்னைக்கும் சிக்கன் தான் எடுத்தாங்க. என்கூட ஒன்பதாவது படிச்ச சௌந்தர்யா போன் பண்ணி பேசினா. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருக்கம். எனா அவ என் சைஸ்ல இருப்பா. அவ கிட்ட பேசினது சந்தோசமா இருந்தது.

5.11.2010 தீவாவளி - அன்னைக்கு காலைல எட்டு மணிக்கு எழுந்தேன். அன்னைக்கு சிக்கன் பிரியாணி. நான் உருப்படியா ஒன்றுமே பண்ணல. வீட்டுல படிக்கலாம் ன்னு பாட புத்தகம் எடுத்துட்டு வந்தேன். ஆனா இந்த டிவி, கம்ப்யூட்டர் என்ன கெடுத்துடுச்சி. அன்னைக்கு மாலை மைனா படத்துக்கு போனோம்.

அடுத்த நாள் (6.11.2010) விடிந்தது அன்னைல இருந்து எனக்கு பயம் வர ஆரம்பிச்சது. ஐயோ இன்னும் ஸ்கூல் க்கு போக ஒரு நாள் தான் தானே இருக்கு ன்னு பயம் வர ஆரம்பிச்சது. இதுல இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா நான் ஸ்கூல் க்கு போற அன்னைக்கு (8.11.2010) இரண்டாம் இடைத் தேர்வு. நான் இங்க படிக்கலாம் ன்னு நினைப்பேன் இன்னும் மூன்று நாள் இருக்கு ரெண்டு நாள் இருக்கு, இன்னும் ஒரு நாள் இருக்கு ன்னு ஓட்டி ஓட்டி கடைசியா ஏழாம் தேதியும் வந்தது. நாளைக்கு ஸ்கூல் அதுவும் தேர்வு வேற இருக்கு. அன்னைக்கு எங்க வீட்டுல சிக்கன் இல்ல , கீரை தான். சாப்பாடே இறங்கல. கஷ்டமா இருந்தது. எங்க ஹாஸ்டல் கண்ணு முன்னாடி வந்து வந்து போய்க்கிட்டே இருந்தது. கொஞ்ச கொஞ்சமா மகிழ்ச்சி போய் துன்பம் என்ன நெருங்கிக்கிட்டே இருந்தது. அன்று மாலை மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு லீவ் என்று நியூஸ் ஓடிட்டு இருந்தது. நம்ம ஊர் பேர் வராதான்னு டிவியையே ஏக்கமா பார்த்துட்டே இருந்தேன். அம்மாவையும் அக்காவையும் நம்ம ஊர்ல லீவ் விடமாட்டான்களா ன்னு கேட்டுக்கிட்டே இருந்தேன். எனக்கு துக்கம் தொண்டைய அடிச்சது. என்னால ஒண்ணுமே செய்ய முடியல.

நாளைக்கு ஸ்கூல் க்கு போறோம் ன்னு தெரிஞ்சும் நான் கம்ப்யூட்டர்ல கேம் தான் விளையாடிட்டு இருந்தேன். நான் ரொம்ப நொந்து போய்டேன். கீழ் வீட்டில் இருக்கும் தாத்தாவை பார்க்க சென்ற அக்கா கத்திக் கிட்டே மேல வந்தா என்னன்னு கேட்டதுக்கு மழை காரணமா நாளைக்கு சேலத்துல இருக்குற எல்லா ஸ்கூல் க்கும் லீவ் ன்னு சொன்னா. நான் மற்ற friends க்கு போன் பண்ணி தகவல் சொன்னேன். முக்கியமான விஷயம் நாலாந்தேதி, ஐந்தாம்தேதி, ஆறாம்தேதி படிக்காத நான் ஏழாம் தேதி படிச்சேன். அது ஒன்னு தான் கவலையா இருந்தது. ஏனா நான் படிச்சேன் ஆனா எட்டாம் தேதி லீவ் விட்டுட்டாங்க. எட்டாம் தேதி லீவ் ன்னு சொல்லி இருந்தா அன்னைக்கே படிச்சி இருக்கலாம். அப்புறம் நான் என் மனச தேத்திக்கிட்டேன் தமிழ் தான படிச்சோம் ன்னு.

அடுத்த நாள் எத்தாம் தேதி அம்மா வெண்டைக்காய் குழம்பு வெச்சாங்க. அப்புறம் மத்தியானம் கொஞ்சம் படிச்சேன். ஏனா அன்னைக்கு அக்கா வீட்டுல இல்ல. அவளுக்கு அன்று காலேஜ் இருந்தது. அப்புறம் அன்று இரவு அம்மா எனக்கு பரோட்டா பிடிக்கும் ன்னு வாங்கிட்டு வந்தாங்க. ஆனா அன்னைக்கு எனக்கு பரோட்டா பிடிக்கல (ஏனா அடுத்த நாள் ஸ்கூல்) பரோட்டா சாப்பிட்டு இருக்கும் போது கண்ணுல கண்ணுதண்ணி நின்னுச்சி. அம்மா மனசு கஷ்டப்படக்கூடாது ன்னு நான் அழல. அம்மா கிட்ட கேட்டுக் கிட்டே இருந்தேன் நாளைக்கு ஸ்கூலா ஸ்கூலான்னு அக்காகிட்டையும் கேட்டேன் ஆமாடின்னு சொன்னா. அன்று இரவு அம்மாகூடையே படுத்துக்கிட்டேன். இரவு முழுக்க அழுகை வந்துகிட்டே இருந்தது. அப்புறம் அடுத்த நாள் காலைல ஐந்துஅரை மணிக்கு எழுந்தேன் விடிஞ்சிடுச்சி வெளில போய் பார்த்தேன். மழை வராதா?, லீவ் விட மாட்டாங்களான்னு. இன்னைக்கும் அந்த ஜல் புயல் வந்தா நல்ல இருக்குமே ன்னு நினச்சேன். இல்லனா எல்லா ஸ்கூலையும் இடிச்சா நல்லா இருக்கும் நினச்சேன். நானே ஸ்கூல இடிச்சிடலாம்ன்னு கூட ஆசைப்பட்டேன். ஊர்ல இருக்குற அக்கா போன் பண்ணி பேசினாங்க. எனக்கு அழுகையே வந்துடுச்சி. அழுதேன் அழுதேன் அழுது தீர்த்தேன். அப்புறம் ஸ்கூல் க்கு போக ரெடி ஆனேன். அக்கா நேற்று அம்மா வாங்கி வந்த பரோட்டாவ கொத்து பரோட்டாவா முட்டைஎல்லாம் போட்டு செய்துக் கொடுத்தா. என்னால சாப்பிட முடியல. மறுபடியும் எப்ப வீட்டுக்கு வருவேன் ன்னு அம்மாகிட்ட கேட்டேன். அரையாண்டு விடுமுறை டிசம்பர் கடைசி வாரம் விடுவாங்க ன்னு சொன்னாங்க. என்ன என்னாலேயே அடக்க முடியல. மனசே இல்லாம கிளம்பினேன். என் மாமா தான் என்ன பஸ் எற்றிவிட்டார். நான் மீண்டும் இந்த மாதிரி நான்கு நாட்கள் விடுமுறை வருமான்னு ஏங்கிக் கொண்டே பஸ் ஏறினேன். பஸ் எடுத்தாங்க. பஸ் போக போக நாம இந்த ஐந்து நாள் லீவ்ல என்ன உருப்படியா பண்ணினோம் ன்னு நினைச்சிட்டே போனேன். காட்சி வலைதளத்தில் சில கதைகள் படித்தேன். வேற ஒண்ணுமே உருப்படியா பண்ணல. பஸ் ஸ்கூல நெருங்கிக் கிட்டே இருந்தது. என் மனம் பதறிக் கொண்டே இருந்தது.

நான் என்னைக்குமே வீட்டுல இருந்து வரும் போது கவலையா வந்தது இல்ல. சரி இன்னும் ரெண்டு வருஷம் தான். அதுக்கப்புறம் அம்மாகூட தான இருப்போம் ன்னு நினைச்சிக்கிட்டேன். திரும்பவும் இந்த பஸ்ல எப்போ சேலம் வருவோம் ன்னு நினைக்கும் போது விசில் அடித்தது. பஸ்ஸை விட்டு பிரியாமல் பிரிந்து பள்ளியில் உள்ள விடுதிக்கு சென்றேன் அரையாண்டு விடுமுறை எப்போ வருமென்று....


வெள்ளி, 15 ஜனவரி, 2010

என் அரையாண்டு விடுமுறை அனுபவங்கள் ....

(என் அரையாண்டு விடுமுறை 24.12.2009 - 3.1.2010 வரை )

23. 12. 2009 அன்று மாலை ஹாஸ்டலில் இருந்து வீட்டிற்கு வந்தேன். அக்காவைப் பார்த்ததும் ஒரே சந்தோசம் . நான் வந்தாலே அவளுக்கு பயம் வந்துவிடும். ஏன்னென்றால் நான் அவளை அடித்துக்கொண்டே இருப்பேன். அன்று இரவு டிவி பார்த்து பொழுதை கழித்தேன் . அன்று மட்டும் அல்ல, என்னைக்கும் எனக்கு டிவி தான் ஏன்னா ஹாஸ்டல்ல டிவி இல்ல. ஒரு பாட்டுக் கூட கேட்க முடியாது. அம்மா என்னை பார்க்க வந்தால் அவங்க செல்போன்ல பாட்டு கேட்பேன் நல்ல பாட்டா செல் போன்ல ஏத்திகிட்டு வர சொல்லுவேன். அதனால தான் வீட்டுக்கு வந்த உடன் டிவி பார்க்கிறேன். எனக்கு எழுதும் ஆர்வம் முன்பு இருந்தது. கொஞ்ச வருஷம் டிவி பார்த்தே பொழுத கழிச்ச்சதனால எழுதும் ஆர்வம் குறைந்தது. ஆனால் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க எழுது சொர்ணான்னு. இப்பவும் அப்படித்தான் சொன்னாங்க எனக்கு என்ன எழுதறதுன்னு தெரிலன்னு சொன்னேன். அரையாண்டு விடுமுறைல நீ என்னன்னா செஞ்சன்னு எழுதிவைன்னு சொன்னாங்க.

என்னடா இது ஜாலியா இருக்கலாம்னு வீட்டுக்கு வந்தா அம்மா எழுத சொல்றாங்கலேன்னு கஷ்டமா போச்சு. இதுக்கு முன்னாடி நான் எழுதன கட்டுரையெல்லாம் அம்மா ஆர்வமா படிப்பாங்க . என் எழுத்துக்கள் என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் .நான் நல்லா எழுதுவேன்னு எல்லார்க்கிட்டயும் சொல்லுவாங்க ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு தானே ) இப்பக்கூட அம்மா எழுத சொல்றாங்கன்னு தான் கிறுக்குறேன்.

இன்னிக்கு எழுதுறேன், நாளைக்கு எழுதுறேன்னு அம்மாவ ஏமாத்தி ஏமாத்தி எனக்கு வேண்டியது வாங்கிக்குவேன். அம்மாவும் புள்ள எழுத போறான்னு நான் கேட்டத எல்லாம் வாங்கி கொடுப்பாங்க. எனக்கு எழுதணும்ன்னு ஆசைதான் டிவி , கம்ப்யூட்டர் இருக்கும் போது எழுத மனசு வருமா ? அதையே தான பாக்கணும்ன்னு தோணும். நீங்களே சொல்லுங்க.

ஆனாலும் அரையாண்டு விடுமுறையில் வைக்கம் முகமது பஷீர் எழுதிய "இளம் பருவத்து தோழி'' யை படித்தேன். ( இந்த கதையைப் பற்றி இன்னொருக் கட்டுரையில் சொல்கிறேன் ) ஜெயகாந்தன் எழுதிய 3 சிறுகதைகள் படித்தேன்.
1. அக்னி பிரவேசம்
2. நந்தவனத்தில் ஒரு ஆண்டி
3. அந்தரங்கம் புனிதமானது
மீதி கதைகளை பொங்கல் விடுமுறையில் படித்து விடவேண்டும்.

24.12.2009 அன்று எங்கள் ஊர் அருகே உள்ள தாதம்பட்டிக்கு அம்மா, அக்காவுடன் சென்றேன். அன்று ''பெரியார்'' நினைவு நாள் தாதம்பட்டியில் தான் பெரியாரின் பாட்டி வீடு இருந்தது. அவர் மனைவி நாகம்மை அம்மாவின் வீடும் அங்கு தான் இருந்தது. இப்போது பெரியாரின் சில உறவினர்கள் அங்குதான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பேசிவிட்டு வந்தோம். தாதம்பட்டியில் தான் பெரியார் தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டி சாய்த்தார்.
( பெரியார் - அஜயன்பாலா பக். 50 )
இது அரையாண்டு விடுமுறையில் கிடைத்த முதல் அனுபவம் .

26.12.2009 அன்று மேச்சேரி அருகே ஏர்வாடி என்ற கிராமத்தில் நடந்த கலை விழாவிற்கு நான், என் அம்மா, அக்கா மூவரும் சென்றோம். முனைவர் கே. ஏ. குணசேகரன் , எடிட்டர் லெனின், நாஞ்சில் நாடன் போன்றோர் எல்லாம் வந்து இருந்தார்கள் . அங்குதான் நான் என் வாழ்கையில் முதல் முதலாக
பொம்மலாட்டத்தையும், தெரு கூத்தையும் கண்டு ரசித்தேன். அந்நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஈழத்து தமிழ் சகோதிரிகள் இருவரை அங்கு சந்தித்தேன். நண்பர்களாகிவிட்டோம் . அரையாண்டு விடுமுறையில் இது இரண்டாவது அனுபவம்.

அம்மாகிட்ட வேட்டைக்காரன் படத்துக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன். அதுக்கு அம்மா உன் புத்தி ஏன் இப்படி போகுது உனக்கு ரசனையே இல்லன்னு திட்டினாங்க. சி.டியாச்சும் வாங்க காசு குடுங்கன்னு கெஞ்சி கூத்தாடி சி.டி வாங்கி பார்த்தேன். படம் பார்த்த பின்னாடி தான் அம்மா சொன்னது எவ்வளவு பெரிய உண்மைன்னு தெரிஞ்சது .

டிவி இல்லனா கம்ப்யூட்டர் - ரெண்டையும் அம்மா ஆப் பண்ணிட்டாங்கனா செல்போன் ல பாட்டு கேட்பேன். அது இல்லன இது ஏதாவது ஒரு சவுண்ட் வீட்ல கேட்டுகிட்டே இருக்கணுமான்னு அம்மா சத்தம் போடுவாங்க.

இதுமேல எங்க தாத்தா எப்பபார்த்தாலும் டிவி பார்க்கறதும் , நெட்ட நெட்டுக்கிட்டு பார்க்கறதும் வேலையா போச்சின்னு திட்டுவாரு. ஹாஸ்டல்ல நிம்மதி இல்லாம வீட்டுக்கு வந்தா வீட்லயும் நிம்மதி இல்ல. அத பண்ணாத இத பண்ணாதன்னு சொல்றாங்க அரையாண்டு லீவ்ல நான் ஒரு படத்துக்குக்கூட தியேட்டர்க்கு போகல தெரியுமா.

அய்யய்யோ ............ முக்கியமான ஒரு விசயத்த சொல்ல மறந்துட்டேனே. அரையாண்டு கேள்வி பதில எழுத்திட்டு வர சொன்னாங்க . புக்கே தொடாம லீவ்ல ஜாலியா இருக்கலாம்னா இத வேற எழுதணும். அதுல பாதி நல்ல வேல நான் ஹாஸ்டல்ல எழுதிட்டேன். இன்னும் பாதி இருந்தது எப்படியோ அந்த கொடுமையும் எழுதி முடிச்சிட்டேன்.

இப்ப அம்மாக்காக இந்த கட்டுரைய எழுதுறேன். கண்ணமூடி கண்ண திறக்கறதுக்குள்ள 10 நாள் லீவ் போய்டுச்சி. ஒவ்வொரு நாளும் ராத்திரி படுக்கும் போது இன்னும் 5 நாள் தான் இருக்கு , 4 நாளு , 2 நாளுதான் இருக்குன்னு வேதனையோடு தான் தூங்குவேன். நான் எதிர்ப் பார்த்த அந்த பயங்கரமான நாள் வந்தது. ஆமாம் 4 லாம் தேதி வந்துடுச்சி. அதுக்குள்ளே எப்படி வந்துச்சினே தெரில. 3 ஆம் தேதி நெனச்சேன் 4 லாம் தேதி வரவே கூடாதுன்னு. ஆனா வந்துருச்சே என்ன செய்ய பள்ளிக்கூடத்துக்கு போகணுமே கெளம்பிட்டேன் சோகத்தோட.

எந்த சந்தோசமும் அனுபவிக்கல . அதுக்கு மேல ஒரு வருத்தம் . ஒரே ஒரு படம் மட்டும் தான் பார்த்தேன் தெரியுமா

அரையாண்டு லீவ் எப்படி போச்சுன்னு அம்மா எழுத சொன்னாங்கல்ல. அத சொல்ல ஒன்னும் இல்ல . எப்படியோ அம்மாவோட ஆசைய பொங்கல் லீவ்ல நிறைவேத்திட்டேன். 4 லாம் தேதி அம்மா என்னை பஸ் ஏத்தும் போது சொன்னாங்க. அரையாண்டு பேப்பர் கொடுப்பாங்க சொர்ணா. மார்க் கம்மியா இருந்தா வருத்தப்படாத நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அடுத்த பரிச்சைல அதிகமா மார்க் எடுத்துரலாம் ன்னு சொன்னாங்க.

நான் அம்மாவிடம் சிரித்துக்கொண்டே சொன்னேன் . அத வருத்தப்படுரவங்கக்கிட்ட சொல்லுங்க. நானாவது வருத்தப்படுரதாவது !!!
கணக்குல 36 மார்க். இவ்வளவு எப்படி எடுத்தேன்னு எனக்கே தெரில. 80 , 85 , 90 மார்க் எடுத்த பிள்ளைங்க எல்லாம் அழுவுது. நான் மட்டும் சிரிச்சிக்கிட்டே இருந்தேன் ஏன்னா................. நான் பாஸ் ஆய்ட்டேன். அடுத்த பரிச்சைல நான் எப்படியும் 40 மார்க் எடுத்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு.

கணக்கு பாடத்த பாடத்திட்டத்துல இருந்து எடுத்துடனும். எல்லா பாடத்துலயும் 80 மார்க்குக்கு மேலதான் எடுப்பேன். இந்த வீணாபோன கணக்குல 40 எடுக்குறதே கஷ்டமா இருக்கு. ஆமாம் உங்களுக்கு .............................????????

அனைவருக்கும் ஏன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .