வெள்ளி, 15 ஜனவரி, 2010

என் அரையாண்டு விடுமுறை அனுபவங்கள் ....

(என் அரையாண்டு விடுமுறை 24.12.2009 - 3.1.2010 வரை )

23. 12. 2009 அன்று மாலை ஹாஸ்டலில் இருந்து வீட்டிற்கு வந்தேன். அக்காவைப் பார்த்ததும் ஒரே சந்தோசம் . நான் வந்தாலே அவளுக்கு பயம் வந்துவிடும். ஏன்னென்றால் நான் அவளை அடித்துக்கொண்டே இருப்பேன். அன்று இரவு டிவி பார்த்து பொழுதை கழித்தேன் . அன்று மட்டும் அல்ல, என்னைக்கும் எனக்கு டிவி தான் ஏன்னா ஹாஸ்டல்ல டிவி இல்ல. ஒரு பாட்டுக் கூட கேட்க முடியாது. அம்மா என்னை பார்க்க வந்தால் அவங்க செல்போன்ல பாட்டு கேட்பேன் நல்ல பாட்டா செல் போன்ல ஏத்திகிட்டு வர சொல்லுவேன். அதனால தான் வீட்டுக்கு வந்த உடன் டிவி பார்க்கிறேன். எனக்கு எழுதும் ஆர்வம் முன்பு இருந்தது. கொஞ்ச வருஷம் டிவி பார்த்தே பொழுத கழிச்ச்சதனால எழுதும் ஆர்வம் குறைந்தது. ஆனால் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க எழுது சொர்ணான்னு. இப்பவும் அப்படித்தான் சொன்னாங்க எனக்கு என்ன எழுதறதுன்னு தெரிலன்னு சொன்னேன். அரையாண்டு விடுமுறைல நீ என்னன்னா செஞ்சன்னு எழுதிவைன்னு சொன்னாங்க.

என்னடா இது ஜாலியா இருக்கலாம்னு வீட்டுக்கு வந்தா அம்மா எழுத சொல்றாங்கலேன்னு கஷ்டமா போச்சு. இதுக்கு முன்னாடி நான் எழுதன கட்டுரையெல்லாம் அம்மா ஆர்வமா படிப்பாங்க . என் எழுத்துக்கள் என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் .நான் நல்லா எழுதுவேன்னு எல்லார்க்கிட்டயும் சொல்லுவாங்க ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு தானே ) இப்பக்கூட அம்மா எழுத சொல்றாங்கன்னு தான் கிறுக்குறேன்.

இன்னிக்கு எழுதுறேன், நாளைக்கு எழுதுறேன்னு அம்மாவ ஏமாத்தி ஏமாத்தி எனக்கு வேண்டியது வாங்கிக்குவேன். அம்மாவும் புள்ள எழுத போறான்னு நான் கேட்டத எல்லாம் வாங்கி கொடுப்பாங்க. எனக்கு எழுதணும்ன்னு ஆசைதான் டிவி , கம்ப்யூட்டர் இருக்கும் போது எழுத மனசு வருமா ? அதையே தான பாக்கணும்ன்னு தோணும். நீங்களே சொல்லுங்க.

ஆனாலும் அரையாண்டு விடுமுறையில் வைக்கம் முகமது பஷீர் எழுதிய "இளம் பருவத்து தோழி'' யை படித்தேன். ( இந்த கதையைப் பற்றி இன்னொருக் கட்டுரையில் சொல்கிறேன் ) ஜெயகாந்தன் எழுதிய 3 சிறுகதைகள் படித்தேன்.
1. அக்னி பிரவேசம்
2. நந்தவனத்தில் ஒரு ஆண்டி
3. அந்தரங்கம் புனிதமானது
மீதி கதைகளை பொங்கல் விடுமுறையில் படித்து விடவேண்டும்.

24.12.2009 அன்று எங்கள் ஊர் அருகே உள்ள தாதம்பட்டிக்கு அம்மா, அக்காவுடன் சென்றேன். அன்று ''பெரியார்'' நினைவு நாள் தாதம்பட்டியில் தான் பெரியாரின் பாட்டி வீடு இருந்தது. அவர் மனைவி நாகம்மை அம்மாவின் வீடும் அங்கு தான் இருந்தது. இப்போது பெரியாரின் சில உறவினர்கள் அங்குதான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பேசிவிட்டு வந்தோம். தாதம்பட்டியில் தான் பெரியார் தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டி சாய்த்தார்.
( பெரியார் - அஜயன்பாலா பக். 50 )
இது அரையாண்டு விடுமுறையில் கிடைத்த முதல் அனுபவம் .

26.12.2009 அன்று மேச்சேரி அருகே ஏர்வாடி என்ற கிராமத்தில் நடந்த கலை விழாவிற்கு நான், என் அம்மா, அக்கா மூவரும் சென்றோம். முனைவர் கே. ஏ. குணசேகரன் , எடிட்டர் லெனின், நாஞ்சில் நாடன் போன்றோர் எல்லாம் வந்து இருந்தார்கள் . அங்குதான் நான் என் வாழ்கையில் முதல் முதலாக
பொம்மலாட்டத்தையும், தெரு கூத்தையும் கண்டு ரசித்தேன். அந்நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஈழத்து தமிழ் சகோதிரிகள் இருவரை அங்கு சந்தித்தேன். நண்பர்களாகிவிட்டோம் . அரையாண்டு விடுமுறையில் இது இரண்டாவது அனுபவம்.

அம்மாகிட்ட வேட்டைக்காரன் படத்துக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன். அதுக்கு அம்மா உன் புத்தி ஏன் இப்படி போகுது உனக்கு ரசனையே இல்லன்னு திட்டினாங்க. சி.டியாச்சும் வாங்க காசு குடுங்கன்னு கெஞ்சி கூத்தாடி சி.டி வாங்கி பார்த்தேன். படம் பார்த்த பின்னாடி தான் அம்மா சொன்னது எவ்வளவு பெரிய உண்மைன்னு தெரிஞ்சது .

டிவி இல்லனா கம்ப்யூட்டர் - ரெண்டையும் அம்மா ஆப் பண்ணிட்டாங்கனா செல்போன் ல பாட்டு கேட்பேன். அது இல்லன இது ஏதாவது ஒரு சவுண்ட் வீட்ல கேட்டுகிட்டே இருக்கணுமான்னு அம்மா சத்தம் போடுவாங்க.

இதுமேல எங்க தாத்தா எப்பபார்த்தாலும் டிவி பார்க்கறதும் , நெட்ட நெட்டுக்கிட்டு பார்க்கறதும் வேலையா போச்சின்னு திட்டுவாரு. ஹாஸ்டல்ல நிம்மதி இல்லாம வீட்டுக்கு வந்தா வீட்லயும் நிம்மதி இல்ல. அத பண்ணாத இத பண்ணாதன்னு சொல்றாங்க அரையாண்டு லீவ்ல நான் ஒரு படத்துக்குக்கூட தியேட்டர்க்கு போகல தெரியுமா.

அய்யய்யோ ............ முக்கியமான ஒரு விசயத்த சொல்ல மறந்துட்டேனே. அரையாண்டு கேள்வி பதில எழுத்திட்டு வர சொன்னாங்க . புக்கே தொடாம லீவ்ல ஜாலியா இருக்கலாம்னா இத வேற எழுதணும். அதுல பாதி நல்ல வேல நான் ஹாஸ்டல்ல எழுதிட்டேன். இன்னும் பாதி இருந்தது எப்படியோ அந்த கொடுமையும் எழுதி முடிச்சிட்டேன்.

இப்ப அம்மாக்காக இந்த கட்டுரைய எழுதுறேன். கண்ணமூடி கண்ண திறக்கறதுக்குள்ள 10 நாள் லீவ் போய்டுச்சி. ஒவ்வொரு நாளும் ராத்திரி படுக்கும் போது இன்னும் 5 நாள் தான் இருக்கு , 4 நாளு , 2 நாளுதான் இருக்குன்னு வேதனையோடு தான் தூங்குவேன். நான் எதிர்ப் பார்த்த அந்த பயங்கரமான நாள் வந்தது. ஆமாம் 4 லாம் தேதி வந்துடுச்சி. அதுக்குள்ளே எப்படி வந்துச்சினே தெரில. 3 ஆம் தேதி நெனச்சேன் 4 லாம் தேதி வரவே கூடாதுன்னு. ஆனா வந்துருச்சே என்ன செய்ய பள்ளிக்கூடத்துக்கு போகணுமே கெளம்பிட்டேன் சோகத்தோட.

எந்த சந்தோசமும் அனுபவிக்கல . அதுக்கு மேல ஒரு வருத்தம் . ஒரே ஒரு படம் மட்டும் தான் பார்த்தேன் தெரியுமா

அரையாண்டு லீவ் எப்படி போச்சுன்னு அம்மா எழுத சொன்னாங்கல்ல. அத சொல்ல ஒன்னும் இல்ல . எப்படியோ அம்மாவோட ஆசைய பொங்கல் லீவ்ல நிறைவேத்திட்டேன். 4 லாம் தேதி அம்மா என்னை பஸ் ஏத்தும் போது சொன்னாங்க. அரையாண்டு பேப்பர் கொடுப்பாங்க சொர்ணா. மார்க் கம்மியா இருந்தா வருத்தப்படாத நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அடுத்த பரிச்சைல அதிகமா மார்க் எடுத்துரலாம் ன்னு சொன்னாங்க.

நான் அம்மாவிடம் சிரித்துக்கொண்டே சொன்னேன் . அத வருத்தப்படுரவங்கக்கிட்ட சொல்லுங்க. நானாவது வருத்தப்படுரதாவது !!!
கணக்குல 36 மார்க். இவ்வளவு எப்படி எடுத்தேன்னு எனக்கே தெரில. 80 , 85 , 90 மார்க் எடுத்த பிள்ளைங்க எல்லாம் அழுவுது. நான் மட்டும் சிரிச்சிக்கிட்டே இருந்தேன் ஏன்னா................. நான் பாஸ் ஆய்ட்டேன். அடுத்த பரிச்சைல நான் எப்படியும் 40 மார்க் எடுத்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு.

கணக்கு பாடத்த பாடத்திட்டத்துல இருந்து எடுத்துடனும். எல்லா பாடத்துலயும் 80 மார்க்குக்கு மேலதான் எடுப்பேன். இந்த வீணாபோன கணக்குல 40 எடுக்குறதே கஷ்டமா இருக்கு. ஆமாம் உங்களுக்கு .............................????????

அனைவருக்கும் ஏன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .8 கருத்துகள்:

 1. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு பழமொழியை சரியான இடத்துல பொருத்தி இருக்கீங்க,நல்ல எழுத்தாளருக்கான அறிமுக தொடக்கமாகவே இந்த எழுத்துக்கள் உங்களை அடையாளப்படுத்துது.கணிதத்தில் உங்களின் உழைப்பு என்னை ரொம்பவே ஆச்சிரிய பட வைக்கிறது(கண்டிப்ப அடுத்த தேர்வில் மதிப்பெண் அதிகமா எடுக்க பாருங்க,ஏன் என்றால் அடுத்த வருட தேர்வு 10 ஆம் வகுப்பு,அதிலேயும் மதிப்பெண் குறைவாக எடுத்தால் அம்மா உங்களை வருத்தப்படாதே என்று கூற மாட்டார்கள், முன் கூட்டியே உஷார் )வாழ்த்துக்கள் உங்கள் எழுத்துக்கள் தொடர்ந்து இந்த வலைத்தள பகுதியை அலங்கரிக்க வேண்டும்.,இது இந்த மழலை ரசிகனின் வேண்டுகோள் .

  பதிலளிநீக்கு
 2. கருத்துரை எழுதியதற்கு மிகவும் நன்றி தோழர்

  பதிலளிநீக்கு
 3. குழ்ந்தைத்தனம் இன்னும் வெளிவரட்டும்......முதிர்ந்த எழுத்துக்களைவிட.............இதுபோன்ற பதிவுகள் மிகவும் ரசிக்கத்தக்கவை

  பதிலளிநீக்கு
 4. கருத்துரை எழுதியதற்கு மிகவும் நன்றி தோழர்

  பதிலளிநீக்கு
 5. பரவாயில்லையே படிக்கும்போதே உங்களுக்கு இந்த வசதி கிடைச்சிருக்கு கொடுத்துவச்ச மவராசி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. உங்களது எழுத்துக்களுக்கு எனது பாராட்டுக்கள்.பெரியாரிடமும் ஜெயகாந்தனிடமும் காட்டும்
  ஆர்வத்தை கொஞ்சம் கணிததிடமும் காட்டவும்,இப்போதைய காலகட்டத்தில் பெரியாரைவிட கணிதம் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை தரும்,உங்களது எழுது நடை எழுத்தாளர் சுஜாதாவை ஒத்திருக்கிறது.அதிகமான வார்த்தைகளை தெரிந்துகொள்ள அதிகமான புத்தகங்களை படியுங்கள்,
  கணிதத்தையும் சேர்த்தே

  பதிலளிநீக்கு
 7. எதேர்ச்சையாக உங்களுடைய வலைப்பூவிற்கு வர நேர்ந்தது.

  "இளம் பருவத்து தோழி'', ஜெய காந்தன்னு - சின்ன வயசுலேயே நல்ல படைப்புகளை படிக்கிறயே... சந்தோஷமா இருக்கு... நிறைய புத்தகங்களை படியுங்கள். All the best for your upcoming public exams.

  பதிலளிநீக்கு